TN Cabinet: தமிழக மந்திரிசபை மாற்றம் ஒத்திவைப்பு

Crime
தமிழக மந்திரிசபை மாற்றம் ஒத்திவைப்பு

TN Cabinet: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று சமீபத்தில் ஓராண்டை நிறைவு செய்தது. இந்த ஓராண்டு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அமைச்சர்கள் யார் யார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அதேபோன்று தனது துறைகளில் அதிக கவனம் செலுத்தாத அமைச்சர்கள் யார் யார் என்றும் முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவை அமைச்சராக்க வேண்டும் என்று தி.மு.க மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

அவர்களது கருத்தை வலுப்படுத்துவது மூலம் பல்வேறு மாவட்ட தி.மு.க. அமைப்புகளில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் அமைச்சரவை மாற்றம் ஜூன் மாதம் இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 1, 2-ந் தேதிகளில் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டார். அந்தந்த துறைகளின் செயலாளர்களிடம் எந்த எந்த திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பதை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் அமைச்சர்களின் செயல்பாடும் கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் 2 அல்லது 3 அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தலைமை செயலகம் வட்டாரத்தில் பேசப்பட்டது. சில அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் திடீரென தமிழக மந்திரிசபை மாற்றம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் தங்களது மாவட்டங்களில் இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் இந்த மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி வரை கருணாநிதி பிறந்தநாள் நிகழ்ச்சிகள் தினமும் நடத்த அமைச்சர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சர்களின் கவனம் இதில் இருப்பதால் தற்போது மந்திரிசபை மாற்றத்தை செய்ய வேண்டாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைவாரியான ஆய்வுகளை தொடர்ந்து அமைச்சர்கள் தங்கள் துறை பணிகளில் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக தங்கள் துறை தொடர்பான நிலுவையில் உள்ள திட்டங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். மேலும் வளர்ச்சி திட்ட பணிகளிலும் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். எனவே மந்திரிசபை மாற்றம் தள்ளிப்போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: China Space Station: சொந்தமாக விண்வெளி நிலையம் கட்டும் சீனா

இதில் விளம்பரம் செய்ய ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்புக்கொள்ளலாம்.