PM to launch digital currency scheme soon: விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் துவக்கிவைப்பு

விருதுநகர்: PM to launch digital currency scheme soon. டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய நிதி இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் கலந்து கொண்டர்.

இதனைத்தொடர்ந்து பிரதம மந்திரி காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் , கல்வி கடன் , பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுவது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

மேலும் பிரதமர் ஜீவன் ஜோதி காப்பீடு திட்டம் , பிரதமர் விபத்துக் காப்பீடு திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களை 111 கிராமங்களில் 68 வங்கிக் கிளைகளின் மூலம் அனைத்து தகுதி வாய்ந்த பயனாளிகளும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசுத் திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கு உறுதுணையாக செயல்பட்ட 68 வங்கியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார் என்றும், 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு 75 டிஜிட்டல் வங்கிகளை பிரதமர் தொடங்கி வைத்ததையும் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தப்படியாக நாம் பொருளாதாரத்தில் சர்வதேச அளவில் முன்னேறியுள்ளோம் என்று கூறிய அமைச்சர், பிரதமரின் தற்சார்பு திட்டத்தினை ஊக்குவிக்கும் விதமாக தகுதியான பயனாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.