Perarivalan case: பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

perarivalan case
பேரறிவாளன் விடுதலை

Perarivalan case: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது என மாநில அமைச்சரவை எடுத்த முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளிக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு, மத்திய அரசு சார்பில் கடந்த வாரத்தில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 72-வது சட்டப்பிரிவின்படி, மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவிப்பது குறித்து குடியரசுத் தலைவரே முடிவுசெய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தண்டனையிலிருந்து விடுவிக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ள விவகாரங்களில் மாநில அமைச்சரவை பரிந்துரை செய்திருப்பது, அரசியல்சாசன வழிமுறைகளுக்கு எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. 20 அம்சங்கள் கொண்ட இந்தப் பதிலை மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தாக்கல் செய்துள்ளார். அதில், மாநில அரசின் அதிகாரம் குறித்து அரசியல் சாசனப் பிரிவு 161 மற்றும் 162-ல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் தாக்கல் செய்த வாதங்கள், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வுகளின் தீர்ப்புகளுக்கு முரணாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்டால், கடந்த 72 ஆண்டுகளாக நாடு முழுவதும் 161-வது அரசியல் சாசன பிரிவின்படி எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்ற நிலை ஏற்படும் என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, பேரறிவாளனை விடுவிப்பது என அரசியல்சாசனப் பிரிவு 161-ன்படி தமிழக அரசு எடுத்த முடிவு என்பது அரசியல் சாசனத்துக்கும், குற்றவியல் சட்டப்பிரிவுகளுக்கும் உட்பட்டு எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் என அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Mookirattai keerai Soup: சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்