Paramilitary in Erode: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இன்று துணை ராணுவப் படையினர் வருகை

ஈரோடு: Ahead of the Erode East Assembly Constituency by-election, paramilitary forces are engaged in security. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத்தொடரந்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் இன்று வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பளார் மேனகா, தேமுதிக வேட்பளார் ஆனந்த் மற்றம் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னம், அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம், சமாஜ்வாதி கட்சிக்கு சைக்கிள் சின்னம், தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டார்ச் லைட் மற்றும் குக்கர் சின்னங்கள் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர், அதிமுக கூட்டணி வேட்பாளர், தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி என தேர்தல் களத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கையின் முன்னெச்சரிக்கையாக இந்தோ- திபெத்தியன் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை என இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று ஈரோடு வந்தடைந்தனர். இவர்கள் பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.