OPS supporter arrested for threatening ex-minister: முன்னாள் அமைச்சருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர் கைது

சென்னை: OPS supporter arrested for threatening ex-minister: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் நீக்கப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் எனவும் அவர் தீர்ப்பளித்தார்.

இதனைததொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், ஒன்றிணைந்து செயல்படுவோம் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்திருந்தார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே தொடர்ந்து மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் மீண்டும் இணைந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஆர்.பி. உதயகுமாருக்கு தொலைபேசி மூலம் தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன், பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு எப்போது வருவீர்கள், ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளீர்கள் . எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக உள்ளது என மிரட்டல் விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த, தென்காசி மாவட்ட அதிமுக நிர்வாகி சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். கலகத்தை ஏற்படுத்துதல் 153, அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தல் 505, ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அய்யாபுரம் காவல்நிலையத்தினர் வழக்குப் பதிந்துள்ளனர்.