Online darshan tickets for Deepam festival: தீபத் திருவிழாவிற்கு நாளை முதல் ஆன்லைனில் தரிசன டிக்கெட்

திருவண்ணாமலை: Darshan tickets for Deepa festival in Thiruvannamalai will be released online from tomorrow, the collector said. திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கு நாளை முதல் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகா தீபம் காண்பதற்கான கட்டண அனுமதி சீட்டு இணையதளத்தின் மூலம் நாளை முதல் வெளியிடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா நாளான 06.12.2022 அன்று காலை 4.00 மணிக்கு பரணி தீபம் தரிசனம் காண ரூ.500/- கட்டணத்தில் 500 அனுமதி சீட்டுகளும், அன்று மாலை 6.00 மணிக்கு மகா தீபம் தரிசனம் காண ரூ.600/- கட்டணத்தில் 100 அனுமதி சீட்டுகள் மற்றும் ரூ.500/- கட்டணத்தில் 1000 அனுமதி சீட்டுகளும் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதள வழியாக பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 04.12.2022 அன்று காலை 10.00 மணி முதல் வெளியிடப்பட உள்ளது.

கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கண்டிப்பாக தேவை.
ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு கட்டணச்சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.
கட்டணச்சீட்டு பதிவு செய்தவுடன் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் ஓ.டி.பி.எண் குறுஞ்செய்தி பதிவு செய்தவரின் செல்போன் எண்ணிற்கு வரும்.
ஆன்லைன் மூலம் டிக்கட் பதிவிறக்கம் செய்யப்பட்டு பரணி தீபம் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் 06.12.2022 அன்று அதிகாலை 02.00 மணி முதல் 03.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
கட்டணச்சீட்டு பதிவிற்கு பயன்படுத்தப்படும் அதே மின்னஞ்சல் வழியாக கட்டணச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேற்கண்ட இரண்டு தீப நிகழ்வுகளை காணவரும் பக்தர்கள் அசல் கட்டணச்சீட்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு இத்திருக்கோயில் அம்மணி அம்மன் கோபுரம் (வடக்கு கோபுரம்) வழியாக அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தர தவறும் சேவார்த்திகளை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.

கட்டணச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து வருகைதர இருக்கும் சேவார்த்திகள் மேலே குறிப்பிடப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி திருக்கோயிலுக்கு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பக்தர்கள் தீபத்திருவிழா பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வசதியாக Toll Free No. 1800 425 3857 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

திருக்கோயில்களில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள QR Code பலகையினை பயன்படுத்தி பக்தர்கள் நன்கொடைகளை Online மூலம் செலுத்தி அண்ணாமலையார் அருள்பெற வேண்டுகிறோம்.

மகா தீபத்திற்கு பிரார்த்தனை நெய் குடத்திற்கான காணிக்கை கட்டணத்தை இராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அருகில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் நெய்குடத்திற்கான காணிக்கை கட்டணச்சீட்டுகள் விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.