Not allowed to enter AIADMK Office: அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைய மேலும் ஒரு மாதம் அனுமதி இல்லை

சென்னை: Not allowed to enter AIADMK head office for another month: விசாரணை மற்றும் சீரமைப்பு பணிகளால் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் மேலும் மாதத்திற்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் (AIADMK general committee meeting) நடைபெற்றது. அப்போது கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பூட்டை உடைத்து அலுவலகத்திற்குள் நுழைந்ததால் அங்கு வன்முறை சம்பவம் அரங்கேறியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு (AIADMK Head Office) சீல் வைக்க உத்தரவிட்டார்.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு நுழைய அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அறிவித்து இருந்தது. அது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் தொண்டர்கள் வர வேண்டாம் என்ற அறிவிப்பு பலகை அகற்றப்படவில்லை.

இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் தெரிவிக்கையில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அதில், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவகத்தில் நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றது மட்டுமின்றி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் தொண்டர்கள் தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் அதன் சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தொடர்ந்து, அன்று நடந்த வன்முறை மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக காவல் துறை சார்பில் இன்னும் விசாரணை முடிவடையாமல் இருப்பதாலும், தலைமை அலுவலகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் இருப்பதாலும் தொண்டர்களை அனுமதிக்காமல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அலுவலக வாசலில் 15 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.