சென்னை: Union Minister of State L. Murugan was met and thanked by the Narikuravar community. மத்திய இணையமைச்சர் எல்.முருகனை நரிக்குறவர்கள் சமுதாயத்தினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் அவரைச் சந்தித்த நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் அவர்கள் கூறினர். பின்னர் நரிக்குறவர்கள் அமைச்சர் எல்.முருகனுடன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து அமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாரத பிரதமர் தலைமையிலான ஆட்சியில், சமீபத்தில் பழங்குடியின பட்டியலில் இணைக்கப்பட்ட நரிக்குறவ சமூக மக்களை எனது இல்லத்திற்கு அழைத்து கலந்துரையாடினேன். இத்தகைய சிறப்பை வழங்கிய நம் பாரத பிரதமருக்கு தங்களின் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தனர், என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் குருவிக்காரர், நரிக்குறவர் உள்ளிட்ட சில சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று போராடி வந்தனர். இவர்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, கடந்த புதன் கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் உள்பட கர்நாடகம், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த நரிக்குறவர், குருவிக்காரர், ஹட்டி, பிரிஜியா போன்ற சமுதாயத்தினரை சேர்க்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், பழங்குடியினருக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இனி நரிக்குறவர், குருவிக்காரர், சமூகத்தினருக்கும் கிடைக்கும்.
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தை சேர்ப்பதற்கான மசோதா சட்டமாக இயற்றப்படும். அதன்பிறகு, தமிழகத்தின் திருத்தப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், மத்திய அரசின் தற்போதைய நலத் திட்டங்களின் பயன்களை பெற முடியும்.
மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை, வெளிநாடுகளில் படிப்பதற்கான தேசிய கல்வி உதவித்தொகை, தேசிய ஆய்வு உதவித்தொகை, உயர்தரக் கல்வி, தேசிய ஷெட்யூல்டு பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்திடம் இருந்து சலுகை கடன்கள், ஷெட்யூல்டு பழங்குடியின மாணவர்கள் மற்றும் மாணவியருக்கான விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் இந்த இனத்தவர் பயன்பெற முடியும். மேலும், மத்திய அரசு கொள்கையின்படி, அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பயன்களையும் இவர்கள் பெறமுடியும்.



