Multi-crore fraud online: நாமக்கல்லில் ஆன்லைனில் பல கோடி மோசடி; எஸ்பி அலுவலகத்தில் புகார்

நாமக்கல்: A multi-crore fraud online in Namakkalஆ ன்லைன் வர்த்தகம் மூலம் பல கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வர்த்தக மோசடியில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கூறுகையில், வாட்ஸ் அப் மூலம் ஆன்லைன் டிரேடிங் குறித்த தகவல் பரிமாற்றப்பட்டது. ஆர்பிஎக்ஸ் எக்ஸ்சேன்ஜ் என்ற ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் இத்தகவலை வாட்ஸ் அப் மூலம் பலருக்கு அனுப்பியது.

இந்த நிறுவனத்தை நம்பி நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் குறைந்தபட்சம ரூ. 5,000 முதல் அதிகபட்சம் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். அவ்வாறு முதலீடு செய்யும் நபர்களுக்கு நாள்தோறும் முதலீட்டு தொகையில் 10 சதவீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் கூறியபடி கமிஷன் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து பலரை நாங்கள் இதில் அறிமுகப்படுத்தினோம்.

அறிமுகப்படுத்தியர்களும் இதில் முதலீடு செய்தனர். இச்சூழலில் சமீப காலமாக கமிஷன் தொகை எங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. இந்த நிறுவனத்தின் தலைமையிடம் எது என்பது உள்ளிட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. வாட்ஸ் அப் குரூப் அட்மின் எண்ணை தொடர்பு கொண்டாலும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதாக தகவல் வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. அதனால் முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகை திரும்பப் பெற முடியவில்லை. இம்மோசடி நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றுள்ளது. பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.

எனவே போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து எங்களின் பணத்தை மீட்டுத் தருவதுடன், எங்கள் வங்கிக் கணக்கை சம்மந்தப்பட்ட நிறுவனம் உள்பட வேறு யாரும் தவறாக பயன்படுத்த முடியாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.பி ஆபீசில் மனு அளித்துள்ளோம் என்றனர்.

நாடுமுழுவம் இதுமாதிரியான ஆன்லைன் மோசடிகள் வங்கி ஏடிஎம், ஆசை வார்த்தை, லாட்டரி பரிசுத்தொகை மற்றும் வர்த்தகங்கள் என பல விதங்களில் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வந்தாலும் மக்கள் ஏமாற்றமடையத்தான் செய்கின்றனர்.