Modi image on Chess Olympiad ads: செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடி படம்; உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: Modi image on Chess Olympiad ads:செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி (Chess Olympiad) சென்னையில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் (Nehru Stadium in Chennai) இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், நடிகர்,நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியின் விளம்பரங்களில் (Advertisements of Olympiad Games) பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் (Photo of Prime Minister Narendra Modi) இடம்பெறவில்லை என பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் நேற்று நேற்று பிரதமர் மோடியின் புகைப்படங்களை பாஜகவினர் ஒட்டினர். இதனைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் படத்தை மை பூசி அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விளம்பரங்களில், பிரதமர் மோடி படத்தை வைக்க கோரி ராஜேஷ் குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். ஒலிம்பியாட் செஸ் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும் பிரதமர் படம் இடம் பெறாததற்கு நிபந்தனையின்றி தமிழக அரசு சார்பில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில் பன்னாட்டு அளவில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நாட்டின் பெருமையை பறை சாற்ற வேண்டும். நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர்கள் குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் விளம்பரங்களில் இடம் பெறறாதது ஏன்? என உயர் நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியது. செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறுவது சிறப்பு தான், நாம் அனைவரும் நாட்டிற்காகத்தான் உழைக்கிறோம். ஆனால் இதில் சிறு தவறு நடந்துள்ளது. பிரதமர் ஒப்புதல் இல்லாமல் , இந்த நிகழ்வு நடைபெறுமா என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தீர்ப்பு விவரங்கள் இன்று மாலை அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இல்லை என தெரிய வருகிறது. ஆகவே பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம்பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.