Minister PTR Tweet: காலணி பத்திரமா இருக்கு.. வந்து வாங்கிட்டு போகலாம்: அமைச்சர் டுவீட்

சென்னை: Minister PTR tweet about slipper thrown at the car: என் மீது காலணி வீசியவர்கள் வந்து வாங்கிச் செல்லலாம் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த டி.புதுப்பட்டியை சேர்ந்தவர் ராணுவ வீரர் லட்சுமணன். இவர் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் நேற்று தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவ வீரரின் உடலுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அப்போது, முதலில் முதலில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்திவிட்ட பிறகுதான் மற்றவர்கள் அஞ்சலி செலுத்த வேண்டும் என அமைச்சர் கூறியதாக தெரிகிறது. அங்கிருந்த பாஜக.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து கிளம்பிய பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது காரில் புறப்பட்டார். விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது அங்கு கூடி இருந்த பாஜகவினர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜக மகளிரணியினர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினார். உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் காரில் வீசப்பட்ட செருப்பை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக அங்கு நின்றிருந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கோஷமிட்டவர்களையும் அப்புறப்படுத்தினர். தி.மு.க. அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை திமுகவினர் மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, மதுரை மாவட்ட பாஜக பொறுப்பாளர் ராஜ்குமார், மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த தமிழக அரசின் நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன், மாநில பாஜக தலைவர் மற்றும் மாவட்ட தலைவரையும் தகாத வார்த்தைகளால் பேசியும், மரியாதை குறைவாகவும் கண்ணியக்குறைவாகவும் பேசியதோடு, அதிகாரிகளை பார்த்து “இந்த பரதேசி பயலுகளுக்கு என்ன தகுதி உள்ளது? யார் இவன்களை உள்ளே அனுமதித்தது” எனக் கூறி திட்டினார். இதன் பின்னர் அதிகாரிகள் சமரசம் செய்து அமைச்சர் பி.டி.ஆர் தியாகராஜன் மரியாதை செய்து அஞ்சலி செய்து கிளப்பியபின் எங்களது தலைவர்களையும் உள்ள அனுமதித்தனர்.

இந்நிலையில் விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற அமைச்சரின் காரினை உள்ளே நடந்த விசயங்களை கேள்விபட்ட வெளியே நின்றுக்கொண்டிருந்த சில தொண்டர் உணர்ச்சிவசப்பட்டு காரினை மறித்து எதிர்ப்பினை காட்டியுள்ளனர். அப்போது காரினை எங்களது தொண்டர்கள் மீது ஏற்றச் சொல்லி டிரைவரிடம் கத்தியதால் அவரது டிரைவரும் காரினை தொண்டர்கள் மீது ஏற்றி கொல்ல முயன்றுள்ளார்.

மேலும் இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு காவல் துறையினர் எங்களது தொண்டர்கள் மீது தடியடி பிரயோகம் செய்து விரட்டியுள்ளனர். எங்களது கட்சிகாரர்கள் காவல்துறையினரால் ஆண்கள், பெண்கள் என்கிற வித்தியாசம் இல்லாமல் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜனின் துண்டுதலின் படியும், அவரின் கட்டளைப்படியும் காவல் துறையினர் மற்றும் திமுக-வின் குண்டர்கள் எங்களது கட்சி காரர்களை கடுமையாக தாக்கி கொலைமுயற்சி செய்துள்ளனர்.

எனவே அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் மற்றும் திமுகவை சேர்ந்த தொண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிவு செய்ய உத்திரவிடுமாறு காவல் ஆணையாளர் வேண்டுகின்றேன் என புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடரந்து, மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர். கார் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜக மாவட்ட துணைத்தலைவர் குமார் (48), பிரசார பிரிவு செயலாளர் பாலா (49), கோபிநாத் (42), ஜெய கிருஷ்ணா (39), கோபிநாத் (44), முகமது யாகூப் (42) ஆகிய பாஜகவினர் 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்தில், நள்ளிரவில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சென்ற மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், அவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். மேலும் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக கட்சியிலிருந்து சரவணனை நீக்கி மாநில பாஜக தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது கார் மீது வீசப்பட்ட செருப்பை இணைத்து பழனிவேல் தியாகராஜன் ஒரு ட்விட் வெளியிட்டுள்ளார். அதில், நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுவேன், ஆனால் இப்போதைக்கு…. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சில நூறு மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட காணாமல் போன ‘பழைய விமான முணையத்தின் சிண்ட்ரெல்லா’ தனது செருப்பு மீண்டும் வேண்டும் என நினைத்தால், அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்’ என பதிவிட்டுள்ளார்.