Lorry hanging from the flyover: மேம்பாலத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி; ராட்ச ஏணி மூலம் மீட்பு

திருவள்ளூர்: The driver lost control of the container lorry near Ponneri and was rescued safely using a giant ladder. பொன்னேரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய கன்டெய்னர் லாரியில் டிரைவரை ராட்சத ஏணி மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை இறக்கி விட்டு கண்டெய்னர் ஏற்றிச் செல்லும் லாரி ஒன்று வடசென்னை அனல் மின் நிலையத்தை கடந்து வல்லூர் நோக்கி செல்ல முயன்றது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கொசத்தலை ஆற்றை ஒட்டிச் செல்லும் பக்கிங்காம் கால்வாய் மீது உள்ள மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுகள் அளித்த தகவலின் பேரில் அத்திப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ராட்சத ஏணியின் உதவியுடன் மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து லாரி ஓட்டுனரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு அந்தரத்தில் தொங்கிய லாரியை காவல்துறையினர் மீட்டனர். போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுநர் எர்ணாவூரை சேர்ந்த ரபீக் என்பதும், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து வந்த போது சிலிண்டர்களை ஏற்றி கொண்டு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் அதன் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிய போது மேம்பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து அந்தரத்தில் தொங்கியது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் சென்று கொண்டிருந்த லாரி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.