Kaniyamoor School Has Started: கனியாமூர் பள்ளியில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கனியமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் (Kaniyamoor School Has Started) வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (ஜனவரி 11) முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் எல்.கே.ஜி. முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி இண்டர்நேஷனல் தனியார் பள்ளி செயல்பட்டு வந்தது. அப்பள்ளியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து அப்பள்ளியில் ஜூலை 17ம் தேதி வன்முறை வெடித்தது. இதனால் பள்ளியை பொதுமக்கள் சூறையாடினர். இதனால் பள்ளி 145 நாட்களாக இழுத்து மூடப்பட்டது.

மேலும் சேதமடைந்த பள்ளியை சரிசெய்யும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டு வந்த நிலையில் அரசு சார்பில் ஆய்வு ஒன்றும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், 5 வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காத வகையில் நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் 182 நாட்களுக்குப் பிறகு வழக்கம்போல் பள்ளிக்கு வந்து வகுப்புகளில் படித்து வருகின்றனர்.