Independence Day Celebrations in Salem: சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்

சேலம்: Independence Day Celebration at Salem Mahatma Gandhi Stadium: சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

நாட்டின் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இச்சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் காலை 09.05 மணியளவில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்.

பின்னர், முதலாம் படைப்பிரிவு, இரண்டாம் படைப்பிரிவு, மூன்றாம் படைப்பிரிவு, சேலம் மாவட்ட ஊர் காவல்படை, காவல்துறையின் இசைக்குழு உள்ளிட்ட காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தாட்கோ துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.29.84 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் வாகனமும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி பிரிவு) துறையின் சார்பில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த பெரமனூர் ஊராட்சி செயலாளர் அவரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ரூ.25.00 இலட்சமும், மாவட்ட மாற்றுத்தினாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி பிரிவு) சார்பில் விபத்தில்லாமல் 20 வருட காலம் சிறப்பாக பணியாற்றிய ஈப்பு ஓட்டுநர் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 4 கிராம் தங்க பதக்கமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 26 விளையாட்டு வீரர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.57.19 இலட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 41 அலுவலர்களுக்கும், மாநகர காவல் ஆணையரகத்தின் சார்பில் 37 காவலர்களுக்கும், மாவட்ட காவல் துறையின் சார்பில் 29 காவலர்களுக்கும், மேட்டூர் காவிரி ஆற்றின் வெள்ள நீரில் சிக்கிய 3 இளைஞர்களை பத்திரமாக மீட்ட 25 தீயணைப்பு துறை வீரர்களுக்கும், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய 3 மருத்துவமனைகளுக்கும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவியர்களுக்கும் என மொத்தம் 145 நபர்களுக்கு இன்றைய தினம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்திற்கொண்டும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும், சேலம் மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசு தாரார்களின் வீடுகளுக்கே அரசு அலுவலர்கள் நேரில் சென்று பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து, கதர் ஆடை அணிவித்து மரியாதை செலுத்தினர். இச்சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள், நற்சான்றிதழ்கள் பெற்ற அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சுகாதாரத் துறையின் அறிவுரையின்படி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் பங்குபெற்ற சேலம் மாவட்ட வீரர்களின் நினைவுச் சின்னத்தில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இவ்விழாவில் சேலம் மாநகர காவல் ஆணையர் நஞ்மல் ஹோடா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன் குமார் அபினபு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீ அபிநவ், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) எம்.மாடசாமி, சேலம் மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) எஸ்.பி.லாவண்யா, சேலம் வருவாய் கோட்டாட்சியர் சி. விஷ்ணுவர்த்தினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகன்நாதன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதாபிரியா, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வள்ளி சத்தியமூர்த்தி, சேலம் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் எம்.சுப்ரமணி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.