Increase in water flow at Hogenakal: ஓகேனக்கல்லில் நீர்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

தர்மபுரி: Increase in water flow at Hogenakal: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடகா மற்றும் கேரளாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததன் காரணமாக, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. இதனால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. இதனைத்தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் காவல் துறையினர் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். அதேநேரம் ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

ஓகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தால் மீண்டும் அருவிகளில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.