Increase in Aavin milk sales: தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

சென்னை: Increase in Aavin milk sales due to rise in private milk prices: தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை உயர்வு காரணமாக அரசு நிறுவனமான ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உற்பத்தியில் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தவிர தமிழக, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்திலிருந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் மீதமுள்ளவற்றை கொள்முதல் செய்து வருகின்றன. தமிழகத்தின் பால் தேவையில் 84 சதவீதமான1.25 கோடி லிட்டரை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்வது வருகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் தனியார் நிறுவனங்கள் பால் பாக்கெட்களின் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தியது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விலை உயர்வால் ஆவின் பால் பாக்கெட்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது.

இம்மாத முதல் வாரத்துடன் விற்பனையை ஒப்பிடுகையில் தற்போது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் கூடுதலாக விற்பனையாகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சென்னையில் 14.2 லட்சம் லிட்டர் பால் தினசரி விற்பனையான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 14.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தில் தினசரி விற்பனை 29 லட்சம் லிட்டராக இருந்தது. இந்த நிலையில், தற்போது 29.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் தினமும் விற்பனையாகிறது.

இந்த விற்பனை வீட்டு பயன்பாடு மட்டுமல்லாது, தேநீர் கடைகள், ஜூஸ் கடைகள் போன்றோரும் ஆவின் பாலை வாங்க தொடங்கியுள்ளன. இதன் மூலம் தினமும் 1000 ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடிவதாக கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.