Tn Cm presented Semmozhi Tamil awards: செம்மொழித் தமிழ் விருதுகளை வழங்கிய தமிழக முதல்வர்; 16 நூல்கள் வெளியீடு

சென்னை: Tn Cm presented Semmozhi Tamil awards: 2020-22ம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழ் விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில், 2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரனுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியனுக்கும் தமிழக முதல்வர் வழங்கிச் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது கடந்த 2004ம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்று முத்தமிழறிஞர் அவர்கள் ஒன்றிய அரசினைத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 2006-ஆம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான ஒன்றிய நிறுவனத்தின் ஓர் அங்கமாக இந்நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008-ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர் தமிழக முதல்வர் ஆவார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிறப்பினை கருதி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 24.07.2008 அன்று தம் சொந்த ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக அளித்து ‘கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை’-யை நிறுவினார்.

இந்த அறக்கட்டளையின் மூலமாக ஆண்டுதோறும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது, இந்தியாவிலேயே மிக உயரிய வகையில் 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் அடங்கியதாகும்.

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டபின் 2009-ஆம் ஆண்டிற்கான முதல் விருது பின்லாந்து நாட்டு அறிஞர் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா அவர்களுக்கு 2010-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அன்றைய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளுக்குரிய கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் 22.01.2022 அன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, தற்பொழுது 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளுக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவராக விளங்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பெற்ற விருதுத் தேர்வுக் குழுவினரால் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், மேனாள் தமிழ் பேராசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியன் மற்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2020-முனைவர் ம. இராசேந்திரன், (மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்),முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் 03.03.1951 இல் திருவாரூர் மாவட்டம், எட அன்னவாசல் என்னும் சிற்றூரில் பிறந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் இலக்கணக் கடல் தீ. வே. கோபாலையர் அவர்களின் மாணவராகப் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். முதுகலைத் தமிழ், ஆய்வியல் நிறைஞர் ஆகிய பட்டப் படிப்புகளைச் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றவர். காலின் மெக்கன்சியின் (1754-1821) தமிழ்ச் சுவடிகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 1974 முதல் 1986 வரையில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு நிறுவனத்தில் தமிழ்ப் புலவராகவும், 1986 முதல் 1989 வரையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிறப்புத் தகைமையராகவும் விரிவுரையாளராகவும் கல்விப் பணியாற்றியவர். 2008 முதல் 2011 வரை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.

2021 – முனைவர் க. நெடுஞ்செழியன், [மேனாள் தமிழ்ப் பேராசிரியர்), முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்கள் 15.06.1944இல் பிறந்தவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிவர். 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், தமிழ் எழுத்தியல் வரலாறு போன்ற நூல்களை எழுதிய இவர் தமிழரின் அடையாளங்கள் எனும் நூலிற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றவர்.

2022 – முனைவர் ழான் லூய்க் செவ்வியார், [Senior Researcher), CNRS – Universite – D’iderot Paris, Laboratoire d’Histoite des Theories, Linguistiques – (Uumr 7597 HTL), பிரெஞ்சு நாட்டு அறிஞரான முனைவர் ழான் லூய்க் செவ்வியார் 23.03.1956இல் பிறந்தவர். கணிதமும் மொழியியலும் பயின்ற இவர் தமிழ் இலக்கணப் பாரம்பரியத்தில் தனிக் கவனம் செலுத்தித் தொல்காப்பியம் சேனாவரையர் உரையைப் பண்டிதர் தி. வே. கோபாலையரின் துணையுடன் எழுத்தெண்ணிக் கற்றுப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர். தமிழ் மொழிபெயர்ப்பு வரலாற்றில் உரையுடன் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மொழிபெயர்ப்பாக இவரது இந்த மொழிபெயர்ப்பு விளங்குவது சிறப்புக்குரியதாகும். 28 ஆண்டுகளாகத் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தில் (CNRS) ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், தமிழ் யாப்பிலக்கணத்திலும், திருக்குறளிலும் மிகுந்த ஈடுபாடும் புலமையும் கொண்டவர். தேவாரப் பாடல்களை முழுவதுமாகக் கற்றுத் துறைபோகியவர்.

அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் ம. இராசேந்திரன் அவர்களுக்கும், 2021-ஆம் ஆண்டிற்கான விருதினை முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களுக்கும் தமிழக முதல்வர் விருதுகளையும், விருதுடன் தலா 10 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உருவச்சிலையும் வழங்கிச் சிறப்பித்தார்.

2022-ஆம் ஆண்டிற்கான விருது பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் ழான் லூய்க் செவ்வியார் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அவர் வெளிநாட்டிலிருந்து வரவியலாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கான விருது பின்னர் வழங்கப்படும்.

மேலும், இவ்விழாவில் உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள், சங்கால மக்கட் பெயர்க் களஞ்சியம், தமிழ்நாட்டில் சமணம் (கி.பி- 6-ஆம் நூற்றாண்டு வரை), ஒப்பில் தொல்காப்பியம், செம்மொழி தமிழ் இலக்கிய இலக்கண மேற்கோள் அடைவு, செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: எழுத்ததிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: சொல்லதிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: பொருளதிகாரம், தமிழர் பாரம்பரிய நெல் வகைச் சொல்லகராதி, உ. வே.சா. இலக்கிய அரும்பத அகராதியும் சங்கநூற் சொல்லடைவும், உ.வே.சா. நாட்குறிப்பு, TIRUKKURAL AS THE BOOK OF THE WORLD, PARIPATAL TEXT – TRANSLITERATION, TRANSLATIONS IN ENGLISH VERSE AND PROSE, PATINEN KILKKANAKKU NULKAL, DRAVIDIAN COMPARATIVE GRAMMAR – III, NALATIYAR IN TELUGU ஆகிய 16 நூல்களையும் தமிழக முதல்வர் வெளியிட்டார்.

இவ்விழாவில், தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, இயக்குநர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.