Income Tax Dept conducts searches in Tn: சினிமா தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை; ரூ.200 கோடி பறிமுதல்

சென்னை: Rs 200 crore has been seized in the raids of the Income Tax Department in Tamil Nadu. தமிழகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீடு, அலுவலகங்களில் நடத்திய வருமானவரித்துறை சோதனையில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2ம் தேதி முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் மற்றும் வேலூரைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படத் தயாரிப்பின்போது கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தியதாக பிரபல சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்குச் சொந்தமான இடங்களில் 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

அன்புச்செழியனைத் தொடர்ந்து பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான எஸ்.தாணுவுக்குச் சொந்தமான இடங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். தி.நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் சென்னை தி.நகர் தணிகாசலம் சாலையில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜாவுக்கு சொந்தமான ஸ்டுடியோ கிரீன் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதே போல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வேலூர் எஸ் பிலிம் உரிமையாளரான சீனிவாசன் என்பவரது அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. வேலூர் அண்ணாசாலையில் உள்ள சீனிவாசனின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சீனிவாசன், வட ஆற்காடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தலர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மேலும் சில தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தலர்கள் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

சோதனை நடவடிக்கைகளின் போது, கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான பல  ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. தேடுதலின் போது ரகசிய இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட பைனான்சியர்களின்  வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட  கணக்கில் வராத பணக் கடன்கள் தொடர்பான உறுதிப்பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் கிடைத்துள்ளன. திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களின் வரி ஏய்ப்புச் சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.

ஏனெனில் வழக்கமான கணக்குப் புத்தகங்களில் காட்டப்படும் தொகையை விட திரைப்படங்கள் வெளியானதிலிருந்து பெறப்பட்ட உண்மையான தொகைகள் அதிகம். அவர்களால் உருவாக்கப்படும் கணக்கில் காட்டப்படாத வருமானம், வெளிப்படுத்தப்படாத முதலீடுகள் மற்றும் பல்வேறு வெளிப்படுத்தப்படாத பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல், திரைப்பட விநியோகஸ்தர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள், திரையரங்குகளில் இருந்து கணக்கில் வராத பணம் வசூலிக்கப்பட்டதை காட்டுகின்றன. ஆதாரங்களின்படி, விநியோகஸ்தர்கள் தங்களுக்குள் சிண்டிகேட்களை உருவாக்கி, தியேட்டர் வசூலை திட்டமிட்டு மறைத்துவிடுவதால் உண்மையான வருமானம் மறைக்ககப்பட்டுள்ளது.

இதுவரை, தேடுதல் நடவடிக்கையின் விளைவாக கணக்கில் வெளிப்படுத்தப்படாத வருமானம் ரூ. 200 கோடி, வெளியிடப்படாத ரூ.26 கோடி ரொக்கம் மற்றும் கணக்கில் வராத ரூ. 3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும்  விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.