Inauguration of HQ building of CMRL: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் திறப்பு

சென்னை: Inauguration of the headquarters building of Chennai Metro Rail Ltd: சென்னை நந்தனத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சென்னை, நந்தனத்தில் 320 கோடி ரூபாய் செலவில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடத்தை திறந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கோயம்பேடு பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் (Operation Control Centre) உதவியுடன் மெட்ரோ ரயில் இயக்கத்தையும், நிர்வாகப் பணிகளையும் நிர்வகித்து வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்திற்காகவும், மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகக் கட்டடத்தை அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நிலையத்தினையொட்டிய முக்கிய சாலையான அண்ணாசாலையில், தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்த 8.96 ஏக்கர் நிலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த தலைமையகக் கட்டடம், தனித்துவ வடிவமைப்பைக் கொண்டு (அடித்தளம் மற்றும் தரைத்தளத்தைத் தவிர்த்து) 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. இந்திய பசுமைக் கட்டட மன்றத்தின் பிளாட்டின அளவு கோலின்படி பல்வேறு பசுமைக் கட்டடக் கூறுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டடத்தில், கட்டம்-I மற்றும் கட்டம்-II இன் இயக்கங்களைக் கண்காணிப்பதற்கான இயக்கக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடர் காலங்களில் ஏற்கனவே கோயம்பேட்டில் அமைந்துள்ள பிரதான இயக்கக்கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பட்சத்தில், இது நிழல் மையமாகவும் செயல்படவுள்ளது.

இந்தக் கட்டடத்தின் வளைந்த வடிவமைப்பு, தகவல் தொடர்பினை மேம்படுத்துவதாகவும், எளிதில் நடமாடும் வகையிலும், பூகம்ப நேரத்தில் ஏற்படும் பளு மற்றும் காற்றின் பாதிப்பினைக் குறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடத்தின் மையப் பகுதியில், இழுவிசைக் கூரையுடன், நீள்வட்ட ஆட்டிரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டடத்தின் உட்பகுதியில் இயற்கையான வெளிச்சம் கிடைப்பதால் மின்சக்தியின் பயன்பாடும் குறைகிறது. ஆட்டிரியத்தின் பக்க சுவர்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதால் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும்.

இந்தக் கட்டடத்தில் அதிக நாட்கள் உழைக்கும் ஒருங்கிணைந்த கண்ணாடி அமைப்பு முறையில், பிளவுபட்ட காற்றோட்டமான கான்கீரீட் தொகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டடத்திற்குள் வெப்பம் கடத்துவது குறைவதுடன், குளிர்பதன தேவையும் குறைகிறது. மேலும், 2 மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கு, வாகனங்கள் நிறுத்துமிடத்திலேயே மின்னேற்றும் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.