Heavy rain will occur in 15 districts: 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும்

சென்னை: Heavy rain will occur in 15 districts of Tamil Nadu. தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (29.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 30ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 6, பொன்னேரி (திருவள்ளூர்), பேரையூர் (மதுரை) தலா 4, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), திருவாரூர், கொள்ளிடம் (மயிலாடுதுறை), வேடநத்தம் (தூத்துக்குடி), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 3, புவனகிரி (கடலூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), மதுக்கூர் (தஞ்சாவூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), தஞ்சாவூர், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 2, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தலை சீர்காழி (மயிலாடுதுறை), எட்டயபுரம் (தூத்துக்குடி), முத்துப்பேட்டை (தூத்துக்குடி மாவட்டம்), கீழச்செருவாய் (கடலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 30ம் தேதி, இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.