Ganesha statue with a stone boat: கல் படகுடன் தண்ணீரில் மிதக்கும் விநாயகர் சிலை

நாமக்கல்: Ganesha statue floating in water with a stone boatவிநாயகர் சிலையுடன் தண்ணீரில் மிதக்கும் 10 கிலோ கல் படகை செதுக்கி சிற்பக்கலைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சிற்பக்கலையின் பாரம்பரிய இடமாக தமிழகம் விளங்கி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பல சிற்ப கலைஞர்கள், பரம்பரையாக சிற்பக்கலையை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில், நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியில் பல்வேறு சிற்பக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கருங்கற்களில் பல்வேறு வகையான சுவாமி சிலைகள், அம்மி, செக்கு மற்றும் அழகிய கலைப் பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். இங்கு வடிவமைக்கும் பல்வேறு சாமி சிலைகள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஒரே கல்லில் பல சிற்பங்களை செதுக்கி, கூலிப்பட்டியை சேர்ந்த சிற்க கலைஞர் ஜெகதீசன் (41) பாராட்டை பெற்றுள்ளார். அவர், ஏற்கனவே ஒரே கல்லில் புல்லாங்குழல், பேனா, சங்கிலி, கல் தேர் போன்றவற்றை செதுக்கி விருது பெற்றுள்ளார். தற்போது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தண்ணீரில் மிதக்கும் கல் படகு செதுக்கி, அதில், நான்கு தூண்கள் அமைத்து, அதற்குள் விநாயகர் சிலையை வைத்து கலை நயத்துடன் தயாரித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க அதிசயம் என்னவென்றால் 10 கிலோ எடை கொண்ட இந்த கல் படகு தண்ணீரில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சிற்பி ஜெகதீசன் கூறுகையில், சிற்பக்கலையில், எனது முன்னோர்கள் தொன்று தொட்டு ஈடுபட்டு வந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், சதுர்வேதமங்களத்தை பூர்வீமாகக் கொண்டிருந்த எனது முன்னோர்கள், இங்கு வந்து, சிற்பக்கலையை தொடர்ந்தனர்.

சிற்பக்கலையில் புதுமையாக செய்ய வேண்டும் என்ற நோக்கில், கருங்கல்லில், புல்லாங்குழல், பேனா, தொடர் சங்கிலி, கல் தேர் ஆகியவைகை நான் செதுக்கி உள்ளேன். அதன்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 கிலோ எடையில் கல் படகு அமைத்து, அதற்குள், விநாயகர் சிலையை வைத்து தண்ணீரில் மிதக்கும் வகையில் செதுக்கியுள்ளேன். வரும் காலங்களில், புதிய வடிவங்களில் மேலும் பல சிலைகளை செதுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் எனக் கூறினார்.