Ganesha Chaturthi Greetings from the leaders: விநாயகர் சதுர்த்தியையொட்டி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: Greetings from the leaders on the occasion of Ganesha Chaturthi. விநாயகர் சதுர்த்தியையொட்டி கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்” என்ற வாக்கிற்கு இணங்க மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, வாழ்வில் நிறைந்த செல்வமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எனது விநாயகர்சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓம் எனும் ஓங்கார வடிவமாய், வினை தீர்க்கும் தெய்வமாய் விளங்கும் முழுமுதற் கடவுளாம் ஸ்ரீவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மன மகிழ்வுடனும் கொண்டாடி மகிழவிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த “விநாயகர் சதுர்த்தி” நல்வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகல சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு, அந்தக் காரியம் தங்கு தடையின்றி சிறப்பாக முடியும் என்பதும்; அதன்மூலம் வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும், துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும் என்பதும் மக்களின் இறை நம்பிக்கையாகும்.

இந்த நன்னாளில், வேண்டுவோர்க்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும்; ஒற்றுமை ஓங்கட்டும்; இல்லந்தோறும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது “விநாயகர் சதுர்த்தி” திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் குறைகள் அனைத்தும் நீங்கி, நல்வாழ்வு பெற்று இன்புற்று வாழ இறையருள் கிடைக்கட்டும்.
அனைவருக்கும் தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், வாழ்வில் வினைகளைத் தீர்த்து, வெற்றிகளைத் தந்திடும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.