Former news director passes away: சென்னை அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி இயக்குனர் காலமானார்

சென்னை: Former news director of All India Radio Chennai passes away. அகில இந்திய வானொலியின் சென்னை நிலைய முன்னாள் செய்தி இயக்குனர் வி.சங்கரன் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.

முன்னாள் செய்தி இயக்குனர் வி.சங்கரனுக்கு வயது 74. இவர் ஆர்என்ஐ (RNI), பத்திரிகை தகவல் அலுவலகம், அகில இந்திய வானொலி, மக்கள் தொடர்புத்துறை (பாதுகாப்பு) ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இலங்கை பிரச்சனையின்போது அங்கு செய்தியாளராகவும் இவர் பணிபுரிந்துள்ளார்.

அகில இந்திய வானொலியின் புதுச்சேரி செய்தியாளராக 10 ஆண்டுகளுக்கும் மேல் இவர் பணியாற்றியுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின்னரும், இவர் கொரோனா பெருந்தொற்று காலம் வரை அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவில் தற்காலிக செய்தி ஆசிரியராக தொடர்ந்து உதவி செய்து வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (01.09.2022) இரவு காலமானார்.

இவரது உடல் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டு அம்மாவட்டத்தில் உள்ள அய்யனார்குளம் கிராமத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

தெரிந்துகொள்வோம்:

சென்னை வானொலி மத்திய அலைவரிசையிலேயே ஒலிபரப்பி வந்தது. இதனால் இதன் ஒலிபரப்பு சென்னை நகரிலும் அதனைச் சுற்றியிருந்த சில பகுதிகளிலும் மட்டுமே கேட்க முடிந்தது. அக்காலத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் சென்னை நகரமே தலை நகராக இருந்தது. அதனால் சென்னையில் பெருமளவு தெலுங்கு பேசும் மக்களும் வாழ்ந்தார்கள். அத்துடன், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி இருந்ததால் ஆங்கிலம் பேசும் மக்களும் வாழ்ந்தார்கள்.

ஆகவே சென்னை வானொலியில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. ஒரு அலைவரிசையில் ஒலிபரப்பிக் கொண்டிருந்த சென்னை வானொலி பின்னர் சென்னை-1, சென்னை-2 என இரண்டு அலைவரிசைகளில் ஒலிபரப்பத்தொடங்கியது. சென்னை-1 அலை வரிசையில் கூடுதலாகத் தமிழ் மொழியிலும், சென்னை-2 அலைவரிசையில் தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின. கன்னடம், மலையாளம் ஆகிய ஏனைய தென்னிந்திய மொழிகளிலும் சில நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.

எழும்பூரில் இயங்கி வந்த வானொலி நிலையம், 1954 ஆம் ஆண்டு காமராஜர் சாலை கலங்கரை விளக்கத்துக்கு எதிரே தற்போதுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டது. வசதியான இடத்துக்கு மாற்றப்பட்டபின் ஒலிபரப்புகளும் அதிகரிக்கப் பட்டன. சிற்றலையிலும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. இதன் மூலம் தமிழ் நாடு முழுவதிலும் மட்டுமன்றி அயல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, இலங்கை போன்ற இடங்களிலும் சென்னை வானொலி நிகழ்ச்சிகளை மக்கள் கேட்க முடிந்தது.

தென்கிழக்கு ஆசிய சேவை என மற்றொரு சேவை சிற்றலையில் ஒலிபரப்பானது. இந்த ஒலிபரப்பை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா போன்ற பல தெற்கு ஆசிய நாடுகளில் கேட்க முடிந்தது.

அனைத்திந்திய வானொலியில் வர்த்தக ஒலிபரப்புகளைச் சேர்ப்பது என்று அரசு தீர்மானித்தபின்னர் விவித பாரதி ஒலிபரப்புகள் நாடு முழுவதும் ஒலிபரப்பு ஆரம்பித்தன. சென்னை வானொலியும் விவித பாரதி ஒலிபரப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறது.

பின்னர் பண்பலை எனப்படும் எஃப். எம். (Frequency Modulation) அலைவரிசையில் ஒலிபரப்புகள் நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்டன. சென்னை வானொலியில் எஃப். எம். ரெயின்போ, எஃப். எம். கோல்ட் என இரு ஒலிபரப்புகள் ஆரம்பிக்கப்பட்டு ஒலிபரப்பாகி வருகிறது.