Lalbagh Flower show : லால்பாக்கில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில் மலர் கண்காட்சி : அமைச்சர் முனிரத்னா

Image Credit : Twitter.

பெங்களூரு: Lalbagh Flower show : பெங்களூரு லால்பாக்கில் ஆக. 5 முதல் 15-ஆம் தேதி வரை நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது என்று தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா தெரிவித்தார்.

பெங்களூரு விகாஸ்சௌதாவில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஆக. 5-ஆம் தேதி லால்பாக்கில் (Lalbagh) தொடங்கும் மலர்க் கண்காட்சியை முதல்வர் பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து, மலர் கண்காட்சி நடைபெறும்.

லால்பாக்கில் மலர்க்கண்காட்சி (Flower show) நடைபெறும் போது காஜனூரில் உள்ள நடிகர் ராஜ்குமாரின் இல்லத்திற்கு மலர் அலங்காரம் செய்யப்படும். ஆக. 15-ஆம் தேதிக்கு பிறகு மலர்க்கண்காட்சி இரண்டொரு நாள் நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. மலர்க்கண்காட்சியில் இடம்பெறுவதற்காக‌ வெளிநாடுகளிலிருந்தும் பூக்களை கொண்டு வந்துள்ளோம் என்றார்.

மேலும் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பிறகு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டிற்கு உரிய வகையில் இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஆகி உள்ள முழு இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த அரசு எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

தாவணகெரேயில் ஆக. 3-ஆம் தேதி சித்தராமையா பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தால் அதனை திருவிழாவாக ஆக்கி கொண்டாடுவார்கள். எனக்கெல்லாம் பிறந்த தேதியே தெரியாது. ஆனால் சித்தராமையா ஆக. 3-ஆம் தேதி தனது பிறந்த நாள் விழா என்பதனை மறக்காமல் விழாவை கொண்டாடுகிறார் என்றார்.