Firecrackers explode near Namakkal: நாமக்கல் அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்; 4 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

நாமக்கல்: Four people were killed in an accident in Mohanur when firecrackers stored in the house of a firecrackers exploded. மோகனூரில் பட்டாசு வியாபாரி வீட்டில் பதுக்கிய பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், மேட்டுத் தெருவில் வசித்து வருபவர் தில்லை குமார். இவர் பட்டாசு விற்பனை செய்ய லைசென்ஸ் பெற்று மோகனூர் அருகே உள்ள குமரிபாளையத்தில் பட்டாசு குடோன் வைத்துள்ளார்.

புத்தாண்டையொட்டி பட்டாசு விற்பனை செய்யும் வகையில், அதிக அளவிலான பட்டாசுகளை நேற்று குடோனிலிருந்து வீட்டுக்கு எடுத்துச்சென்று பதுக்கிவைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று 31ம் தேதி அதிகாலை 3 மணியளவில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் வெடித்து தீப்பற்றி எரிந்தன.

மேலும் இந்த தீ அருகில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் பரவியதால் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. தொடர்ந்து அவரது வீட்டிற்கு அருகிலிருந்த மேலும் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகளும் இடிந்து சேதமடைந்தன. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தில்லைக்குமார் (35) பட்டாசு விபத்தில் சுமார் 50 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி உயிர் இழந்தார். அவரது தாயார் செல்வி (60), மனைவி பிரிங்கா (20) ஆகியோரும் வீட்டின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ஜேசிபி இயந்திரத்தின் மூலம் கட்டிட இடுபாடுகளை அகற்றி அவர்களது உடல்களை போலீசார் மீட்டனர். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பெரியக்காள் (72) என்பவரும் உடல் சிதறி உயிரிழந்தார்.

மேலும் அவது வீட்டுக்கு அருகில் இருந்த வீடுகளில் வசித்து வந்த 11 பேர் பட்டாசு விபத்தில் காயமடைந்து நாமக்கல் மற்றும் மோகனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு நாமக்கல், கரூர் மோகனூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. மேலும் சம்பவம் அதிகாலையில் நடைபெற்றதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீயணைக்கப்பட்டது. தற்போது அங்கு மேலும் யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளார்களா எனவும், சேதம் குறித்தும் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் கிடைத்ததும் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் மோகனூர் வந்து, பட்டாசு விபத்து நடைபெற்ற பகுதியை பார்வையிட்டார்.

சேலம் சரக போலீஸ் டிஐஜி பிரவீன்குமார் அபிநவ், நாமக்கல் ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி சுரேஷ், ஆர்டிஓ மஞ்சுளா, மோகனூர் தாசில்தார் ஜானகி உள்ளிட்ட அதிகாரிகள் சம்ப இடத்தில் முகாமிட்டு மீட்புப்பணிகளை கவனித்து வருகின்றனர். பட்டாசு குடோனுக்கு வேறு இடத்தில் அனுமதி பெற்றுள்ள நிலையில், வீட்டில் பட்டாசுகளை அதிகளவு பதுக்கி வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.