Fine for Puja to the feet of Annamalaiyar: அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை செய்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலை: Auto driver who worshiped Annamalaiyar foot fined Rs.5 thousand. திருவண்ணாமலையில் மலை உச்சிக்கு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை செய்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும். மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்க சென்று தீபத்தை வணங்கினர். திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பிராயசித்த பூஜை நடத்தப்படும். மலையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலாவதை தடுக்கும் வகையில் மலையின் மீது பக்தர்கள் ஏறிச் செல்ல வனத்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மகா தீபத்தின் போதும் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே மலைக்கு சென்று சென்றுவர அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிலர் முறையாக அனுமதி பெறாமல் மலையின் மீது ஏறி சென்று சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். இதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது. வீடியோவில் மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மலர்கள், மலர் மாலை, பழங்கள் மற்றும் நாணயங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதன.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் மலையின் மீது அனுமதியின்றி சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வந்தனர். வனத்துறையின் விசாரணையில் மலை மீது ஏறியது திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பதும், திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டியாகவும் அவர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து இவர் மட்டும் மலை மீது ஏறி சென்றாரா? அல்லது வேறு யாரையாவது அழைத்து சென்றாரா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மலைக்கு அனுமதியின்றி சென்ற முருகனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.