Electricity Board instructions: மழைக் காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்க மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: Electricity Board instructions to avoid electrical accidents. மழைக் காலங்களில் மின் விபத்தால் உயிர் இழப்புகள் தவிர்க்க மக்கள் விழிப்புடன் இருக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மழைக் காலங்களில் மின் விபத்தால் உயிர் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டும்பொழுது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்து, மின்தடை செய்த பின்னரே கிளைகளை வெட்ட வேண்டும்.

மழைக் காலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், இழுவைக் கம்பிகள் அருகே செல்லக்கூடாது.

தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மின் கம்பத்தின அருகில் உள்ள இழுவைக் கம்பியிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டித் துணிகளை உலர்த்தக் கூடாது.

மின் கம்பத்திலோ அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்ட வேண்டாம். மின்கம்பி அறுந்து கிடந்தால் மிதிக்காமலும், தொடாமலும் இருக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோகக் கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். மின் கம்பங்களைப் பந்தல் அமைப்பதற்கோ, விளம்பரப்பலகைகள் அமைப்பதற்கோ பயன்படுத்தக் கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பிகளின் அருகிலோ, மின் மாற்றியின் அருகிலோ நிறுத்திச் சரக்குகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.

வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து மெயின் சுவிட்சை அணைத்து, மின் வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வீடுகளில் ஈரமான இடத்தில் மின் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்க வேண்டாம்.

ஈரமான கைகளுடன் சுவிட்சுகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை இயக்குதல் கூடாது. இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி உள்ளிட்ட மின்சாதனக் கருவிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீர் ஊற்றி அணைக்க முயலக் கூடாது. மழைக் காலங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வோடும் மிகுந்த முன் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு, மின் விபத்துக்களைத் தவிர்க்குமாறு மின்வாரியம் கேட்டுகொண்டுள்ளது.