Edappadi Palaniswami faints: சென்னை ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம்

சென்னை: Former Chief Minister Edappadi Palaniswami fainted: சென்னையில் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.

மின்கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக முடிவு செய்து அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 25ம் தேதி முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் கட்சியினர் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். ஆனால், சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, அதிமுகவின் ஆர்ப்பாட்டத்தை பார்த்து ஸ்டாலின் நடுங்குவதாகவும், திமுக ஆட்சியில் மக்கள் துன்பங்கள் அனுபவிப்பதும், வேதனையிலும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றனர். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு என அனைத்து கட்டணங்களையும் விடியா அரசு உயர்த்தியுள்ளது. ஆட்சிக்கு வந்து நாட்டு மக்களுக்கு என்ன செய்தது திமுக அரசு.

திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதை மறைக்க அதிமுகவினர் மீது பொய் வழக்கை போட்டு வருகிறது. எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் துணிவுடன் எதிர்கொள்ளும் சக்தி அதிமுக இயக்கத்திற்கு உள்ளது. நான் ஆட்சிக்கு வந்ததபோது 3 மாதத்தில், 5 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஆரூடம் கூறினார்கள். ஆனால், சிறப்பான ஆட்சியை தந்தேன்.

தமிழகதத்தில் ஏற்படும் மின்தடையால் மீண்டும் ஒருமுறை திமுக ஆட்சி கவிழும். முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஒப்புதல் வாக்குமூலம் போல, மின்தடையால் திமுக ஆட்சியை இழந்தது. தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தபோது தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள். விரைவில் அதுபோன்ற நிலை வரும்.

மேலும் பொய் வாக்குறுதிகளால் தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. போதைப் பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி முதல் பெட்டிக் கடை வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா கிடைக்கிறது. நிர்வாக திறமை இல்லாமல் போட்டோ ஷூட் மட்டுமே ஸ்டாலின் நடத்தி வருகிறார். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்னிடம் இருக்கிறது எனக் கூறிய ஸ்டாலின் ஏன் இன்னும் அதனை ரத்து செய்யவில்லை? என கேள்வியை எழுப்பினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கி சுமார் 30 நிமிடங்கள் வரை எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதனையடுத்து ஆர்பாட்ட மேடையில் நின்றுகொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக மேடையின் இருக்கையில் அவரை அமர வைத்தனர். பின்னர் கட்சியின் நிர்வாகிகள் ஓடி வந்து குடிக்க தண்ணீர் கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமி மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கடுமையான வெயில் காரணமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு லேசான தலைசுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆர்ப்பாட்டம் முடிவடைந்ததை அடுத்து, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.