Actor Ajith Kumar in pistol competition: திருச்சியில் அஜித்தை காண குவிந்த ரசிகர்கள்; விரட்டியடித்ததால் பரபரப்பு

திருச்சி: Ajith Kumar in pistol and rifle competition: நடிகர் அஜித்குமார் கலந்துகொண்ட மாநில அளவிலான பிஸ்டல் மற்றும் ரைபிள் போட்டியில் ரசிகர்களை விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் (Trichy K.K.Nagar Rifle club) கடந்த 2021, டிசம்பர் 31ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் இயங்கும் ரைபிள் கிளப்பில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகள் கடந்த 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாநிலம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 பேர் கலந்து கொள்ளும் போட்டி முதல் முறையாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ரைபிள் கிளப்பில் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர், திருச்சி மாநகர காவல் ஆணையர், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கலந்து கொண்டனர்.

10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜீனியர் (21 வரை), சீனியர்(21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது.

மேலும் பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 24ம் தேதி முதல் 28ம் தேதி வரையில் போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்க உள்ளார்கள். மேலும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரையில் ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று இறுதி நாளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

இந்நிலையில், திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப்பில் நடைபெறும் மாநில பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்குமார் இன்று கலந்து கொண்டார்.

அப்போது திடீரென ரசிகர்களை பார்த்து கையை அசத்தார். இதனைத்தொடந்து ரசிகர்களும் பொதுமக்களும் அவரை பார்க்க குவிந்து வந்தனர். கூட்டத்தை கலைக்க போலீசார் அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது ஹெச் வினோத் மற்றும் போனிகபூருடன் இணைந்து ‘ஏகே61’ (AK61) படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து இது 3வது படமாகும். இந்த படம் வரும் தீபாவளியன்று (Deepavali Festival) வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், டிசம்பரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு (Ajithkumar movie Shooting) ஐதராபாத்தில் பிரமாண்ட செட்களுடன் நடைபெற்றன. வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மவுண்ட் ரோடு பகுதியில் வங்கிகள் போன்ற செட்கள் போடப்பட்டு விருவிருப்பாக நடைபெற்றன.

இதனிடையே சிறிது இடைவெளியாக நடிகர் அஜித்குமார் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் (Chennai International Airport) வந்த அவரை, விமான நிலைய அதிகாரிகள் போட்டோ எடுக்க அழைத்தபோது, நடிகர் அஜித்குமார் சிரித்துக்கொண்டே வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.