ஒகேனக்கல்: தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது (Hoganakkal Viral Video) ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி. இங்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம். இது போன்று வருபவர்கள் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்வர். அதுன் பின்னர் மீன் வறுவல் மீன் குழம்பு உள்ளிட்டவைகளையும் சுவைத்து மகிழ்வர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக கட்டண கழிப்பிடம் கூத்தப்பாடி ஊராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டணக் கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்க ரூ.10 வசூல் செய்யப்படும் வீடியோவை சமூக வலைதளத்தில் சுற்றுலா பயணிகள் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் வரும் சுற்றுலாப்பயணிகளிடம் ரூ.10 வசூல் செய்வதாகவும் கழிவறையின் கதவுகள் சரிவர மூடுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கழிப்பிடத்தின் வெளிப்பகுதியில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க, குளிப்பதற்கு என்று எழுதப்பட்டு அதற்கு நேராக கட்டண விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் ஒப்பந்ததாரர்கள் அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் சுற்றுலாப்பயணிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.