DGP Shailendrababu Order: ஓய்வு பெற்ற போலீசார் உயிரிழந்தால் இறுதி மரியாதை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: Tamil Nadu DGP Shailendrababu has ordered to pay last respects to retired policemen. ஓய்வு பெற்ற போலீசார் உயிரிழந்தால் இறுதி மரியாதை செய்ய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் உயிரிழந்தால் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்துகொண்டு இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர, மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் எவரேனும் இறக்க நேரிட்டால், காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குநர் சார்பாக மலர்வளையம் வைத்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதில், இதனை தவறாது கடைபிடிக்க ஏதுவாக அனைத்து காவல் நிலையங்களிலும், அந்த காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இந்த பதிவேடு நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும்.

மேலும் இந்த பதிவேடு பராமரிக்கப்படுவதையும், காலம் சென்ற முன்னாள் காவலர்களுக்கு துறை ரீதியாக மரியாதை செய்யும் நிகழ்வுகளையும் உயர் காவல் அதிகாரிகள் ஆய்வின் போது சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.