People Carrying The Dead Body In Running Water:பாலம் இல்லாததால் ஓடும் தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து சென்ற பொதுமக்கள்

நெல்லை: கால்வாயைக் கடப்பதற்கான பாலம் மழைக்காலங்களில் (People Carrying The Dead Body In Running Water) அடித்துச் செல்லப்பட்டு மிக நீண்ட நாட்களாகியும் சரி செய்து கொடுக்கவில்லை. இதன் காரணமாக இறந்தவரின் உடலை கழுத்தளவு தண்ணீரில் சுமந்து செல்ல வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆற்று பாசன வசதிக்காக தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னரே பாளையங்கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் செல்லும் தண்ணீர் குளங்களுக்குச் செல்வதுடன் வயல்களின் பாசனத்திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கால்வாய் தற்போது அதிகளவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்று நீர் செல்லும் பாளையங்கால்வாயின் அருகே மேலச்செவல், மாணிக்கநகர் என்ற பகுதி உள்ளது. அங்கு சுமார் 100க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்திலிருந்து மயானத்துக்குச் செல்லும் சாலை கால்வாய் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

மேலும், மழைக்காலங்களில் கால்வாயில் அதிகமான தண்ணீர் செல்லும் நிலையால் கடந்த 2007ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அப்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அதனை சரி செய்து கொடுக்குமாறு கிராம மக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையில் அப்பாலம் சீர் செய்து கொடுக்கப்படாமலே உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கிராமத்தில் யாராவது உயிரிழந்து விட்டால் கால்வாயில் தண்ணீரில் மூழ்கியபடியே மயானத்துக்கு உடலை எடுத்து சென்று வருகின்றனர். அதே போன்று மாணிக்கநகர் பகுதியைச் சேர்ந்த குலசேகரன் என்ற முதியவர் இன்று (டிசம்பர் 23) உயிரிழந்துள்ளார். அவரது உடலை மயானத்துக்கு எடுத்து செல்வதற்கு பாலம் இல்லாததால் ஓடும் தண்ணீரில் உறவினர் கயிறு கட்டி உடலை சுமந்து சென்றனர். அதிலும் தண்ணீர் அதிகளவு இருப்பதால் கயிறு சற்று ஏமாந்து விட்டால் உறவினர்களும் தண்ணீரில் அடித்து செல்லப்படுவார், உயிரிழந்தவரின் உடலும் தண்ணீரில் அடித்து செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேல் ஆவது அரசு எங்களுக்க பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.