Cyclone Mandous weakens in 6 hours: 6 மணி நேரத்தில் வலுவிழக்கிறது மாண்டஸ் புயல் – வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: Cyclone Mandous weakens in 6 hours. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் 6 மணி நேரத்தில் வலுவிழக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்துள்ளது. மாண்டஸ் எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் நெருங்கும் நிலையில் சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை, விமான நிலையத்தில் மாண்டஸ் புயல் காரணமாக 7 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புயலால் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ”மகாபலிபுரத்தை ஒட்டி புயலானது கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோரத்தை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை இருக்கும். பரவலாக தமிழக பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பொழியும். ஒருநாளில் வெவ்வேறு நேரத்தில் புயலின் வேகமானது ஏறி இறங்கும். தற்போதைய நிலவரப்படி தீவிர புயல், புயலாக மாறி கரையைக் கடக்க இருக்கிறது. கரையைக் கடக்கும் பொழுது புயலின் வேகம் 65 லிருந்து 75 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 6 மணி நேரத்தில் வலுவிழப்பதாகவும் அவர் கூறினார்.