Controversy Over Tamilnadu Description: தமிழ்நாடு பற்றிய சர்ச்சை: ஆளுநர் மாளிகை புதிய விளக்கம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் (Controversy Over Tamilnadu Description) என்று அழைக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அவரது பேச்சின் உள்ளடக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னை ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமத்துக்கான ஏற்பாடுகளை செய்த அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதன் உண்மையான எழுத்து வடிவம் அடங்கிய மொழியாக்கம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி நமது நாட்டை பாரதம் என்கின்ற கண்ணோட்டத்தில் ஒரே குடும்பமாக பார்க்கிறார். ஆனால் இந்த யதார்த்தம் காலனித்துவ காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கேற்பவே தமிழகத்தில் “நாங்கள் திராவிடர்கள்” என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை நாம் அரசியலமைப்பால் ஒன்றிணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே செயலாற்றுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ‘நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் அங்கம் இல்லை’ என்று வலுவான ஒரு கதையை சொல்லி வருகிறார்கள் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார். அதனாலேயே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்தையும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ‘இல்லை, எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.