Mullaiperiyaru Dam: முல்லைப்பெரியாறில் தொடர்ந்து நீர்மட்டம் சரிவு

தேனி: Continued decline in water level in Mullaiperiyaru. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் 142 அடியை தொட்டது. அதுவும் ஓரிரு மணி நேரம் மட்டுமே நீர் மட்டம் 142 அடியாக இருந்தது. அதன் பின்னர் குறைந்து விட்டது.

கடந்த டிசம்பம் மாதம் 20ம் தேதிக்கு பிறகு மழை குறிப்பிடத்தக்க அளவு பெய்யவில்லை. தற்போது ஜனவரி மாதம் 22ம் தேதியை தொட்டு விட்டு நிலையிலும் மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனங்களுக்கு தொடர்ந்து நீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது கூட அணையில் இருந்து விநாடிக்கு 1400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து விநாடிக்கு வெறும் 90 கனஅடி மட்டுமே வருகிறது. இதனால் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 131.50 அடியாக குறைந்தது. நாளை மாலைக்குள் நீர் மட்டம் 130 அடியாக குறைந்து விடும்.

இருப்பினும் ஜனவரி மாதம் இந்த அளவு நீர் மட்டம் போதுமானது தான். இதன் மூலம் தற்போது உள்ள இரண்டாம் போக நெல் சாகுபடியை பாதிப்பு ஏதும் இல்லாமல் எடுத்து விட முடியும். தவிர கோடை காலத்திலும் முழுமையாக குடிநீர் பிரச்னையை முழுமையாக சமாளிக்க முடியும் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

வைகை அணை நீர் மட்டம் 52.62 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1154 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து 1069 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரத்தும், வெளியேற்றமும் சம அளவில் இருப்பதால் நீர் மட்டம் சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 110.37 அடியாக உள்ளது. மஞ்சளாறு நீர் மட்டம் 51 அடியாகவும், சண்முகாநதி நீர் மட்டம் 29.70 அடியாகவும் உள்ளது.