CM review of North East Monsoon activities: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: Tamil Nadu Chief Minister Stalin’s review of North East Monsoon activities. சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்றறு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் 29.10.2022 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் (11-11-2022) தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் சராசரியாக 47.03 மி.மீ. மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 250 மி.மீ. சராசரி மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 436 மி.மீ., கொள்ளிடம் பகுதியில் 317 மி.மீ., செம்பனார் கோயிலில் 242 மி.மீ. அதி கனமழையும், கடலூர் மாவட்டத்தில் புவனகிரியில் 206 மி.மீ., சிதம்பரம் பகுதியில் 308 மி.மீ. என அதி கனமழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கரூர், திருப்பூர், புதுக்கோட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 18 மழைமானி நிலையங்களில் மிக கனமழையும், பல்வேறு மாவட்டங்களில் 108 மழைமானி நிலையங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இதன்காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், நிவாரண மையங்கள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.

சென்னையில் நேற்று 51.95 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், 14 மழைமானி நிலையங்களில் கனமழை பதிவாகியுள்ளது. சென்னையில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது; தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 926 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ளன என்றும், தற்போது, மழை நீரை வெளியேற்ற 618 நீர் இறைப்பான்களும், 45 JCB-களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 16,000 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து மழை பெய்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.

மாவட்டங்களை பொறுத்தவரை, மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசித்த 2729 குடும்பங்களைச் சார்ந்த 4452 நபர்கள் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த 68 நபர்கள் 1 நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 4520 நபர்கள் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் சுமார் 40,500 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. இதனை விரைவில் வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் அவர்கள் அறிவுறுத்தினார்.

முன்னதாக, இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீலகிரி, இராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 குழு வீதம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 92 வீரர்களை கொண்ட 4 குழுக்கள் அனுப்பி வைக்கவும், கடலூர், சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 163 வீரர்களை கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் நிலைநிறுத்திடவும் முதல்வர் உத்தரவிட்டார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் 12-11-2022 மற்றும் 13-112022 ஆகிய நாட்களில் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ள நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புயை பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5,093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மேலும், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் எனவும், உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அத்துடன், மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும், கனமழையின் காரணமாக ஏற்படும் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், மழை நிவாரணப் பணிகளில் இரவுபகல் பாராது பணியாற்றி வரும் அரசு அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டதோடு, தொடர்ந்து இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.