CM Rangaswamy Speech: புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரி பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானம்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இருந்தால் மட்டுமே (CM Rangaswamy Speech) தன்னால் சுயமாக வேலை செய்ய முடியும் இல்லை என்றால் மன உளைச்சல் வருகின்றது என முதலமைச்சர் ரங்கசாமி சமீபத்தில் பேசினார். இது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் புதுச்சேரிக்கு வந்த மத்திய சட்டத்துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கி மாநில அந்தஸ்து வழங்க மத்திய உள்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்து உரிமை கோரும் நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. இந்த கோரிக்கைக்கு முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமை கோரி போராட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமியை அக்குழுவினர் நேரில் சந்தித்து தங்களது கருத்தை தெரிவித்தனர். அதாவது மாநில அந்தஸ்து கோரிக்கையில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும், இக்குழு பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அந்தஸ்து வேண்டி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் கட்சி நிர்வாகிகளும் பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ரங்கசாமி, தானும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.