Chief Minister consults with Collector about Mettur Dam: மேட்டூர் அணையில் 2.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்: முதல்வர் ஆலோசனை

சென்னை: Chief Minister consults with Collector about Mettur Dam: தென்மேற்கு பருவமழையையொட்டி தொடர் மழை பெய்துவரும் சூழ்நிலையில், சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணையிலிருந்து வரும் 2.10 இலட்சம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 2.10 இலட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், இன்று இரவு அல்லது நாளை 2.40 இலட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர், சேலம் மாவட்ட ஆட்சியருடன் காணொலி காட்சி மூலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் பயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருந்தால் உடனடியாக நேரடி கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவிலான உபரி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நீரில் இறங்குவதையும், கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதையும், புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். சேலம் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை எண் 1077, 0427 – 2450498, 0427 – 2452202, 91541 55297 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர பகுதிகளை சுற்றியுள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் 24 மணி நேரமும் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.