Chennai Metro Rail: சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்ட வழித்தட தண்டவாளங்கள் அமைக்க ரூ.163.31 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: 163.31 Crore Contract for Chennai Metro Rail 2nd Phase. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தமானது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டம்-2-ல் வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் பயன்படுத்த 60 kg HH 1080 தரத்தில் தண்டவாளங்களை அமைப்பதற்காக ஜப்பானில் உள்ள M/s Mitsui & Co., நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை ரூ.163.31 கோடி மதிப்பீட்டில் வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் திரு. த. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் தலைமை பொது மேலாளர் திரு. ஹாஜிம் மியாகே, Mitsui & Co., நிறுவனம் ஜப்பான் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் இன்று (11.01.2023) கையெழுத்திட்டனர்.

அமைக்கப்பட வேண்டிய தண்டவாளங்களின் மொத்த அளவு 13885 மெட்ரிக் டன். சோதனை நடைமுறையுடன் கூடிய தண்டவாளங்களின் உற்பத்தி ஏப்ரல் 2023 முதல் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 2023 மற்றும் பிப்ரவரி 2025-க்கு இடையில் தண்டவாளங்கள் மூன்று அடுக்குகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தண்டவாளங்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2-ல் வழித்தடம் 3-ல் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மற்றும் வழித்தடம் 4- ல் மாதவரம் முதல் சிஎம்பிடி வரை பயன்படுத்தப்படவுள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் எஸ். அசோக் குமார், (தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), லிவிங்ஸ்டோன் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ரேகா பிரகாஷ் (திட்ட வடிவமைப்பு) மற்றும் அமித் டாண்டன் மற்றும் எஸ்.கே.பான் Mitsui & Co., மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது உடனிருந்தனர்.