Chariot Accident in Pudukottai: புதுக்கோட்டையில் தேர் சாய்ந்து விபத்து: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை: Chariot Accident in Pudukottai Gokarneswarar Temple: புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் கோயிலில் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை நகரத்திலிருந்து புதுக்கோட்டை-திருச்சி சாலையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருக்கோகர்ணம் எனும் ஊரில் பிரகதாம்பாள் கோயில் அமைந்துள்ளது.

இது ஒரு சிவத் தலமாகும். இக்கோவிலின் மூலவர் கோகர்ணேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாளின் பெயர் பிருகதாம்பாள் என்பதாகும். கோயிலில் பிள்ளையார், கங்காதரர், சப்த கன்னிகைகள் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. ஒரு மகிழ மரத்தின் கீழே சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதி உள்ளது. குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது. புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் வம்சாவளி அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்று வருவதால் தொண்டைமான் அரச குடும்பத்தினரின் குலதெய்வம் இங்குள்ள பிருகதாம்பாள் எனக் கூறலாம்.

மேலும் புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயம் புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. க்கோவிலில் சித்திரை மாதம் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், புரட்டாசி மாதம் நவராத்திரி, ஐப்பசி மாதம் கந்த சஷ்டி, தைப்பூசம் ஆகிய விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில், புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் கோயில் ஆடி மாதம் பத்தாம் நாள் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது எதிர்பாராத விதமாக தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த பெண் ஒருவரை தூக்கிச்செல்லும் போலீசார்.

உடனடியாக அங்கு வந்த புதுக்கோட்டை எம்எல்ஏ பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தல வரலாறு:
காமதேனுவுக்கு தேவேந்திரனால் சாபம் ஏற்பட்டு தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து சேர்ந்தது. பின்பு கபில மகரிஷி, மங்கள மகரிஷி ஆகியோரை வணங்கி ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள்,”தினந்தோறும் காசி போய் கங்கை நீரை கொண்டு வந்து ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்து விட்டு, மீதியை பாறையை கீறி அதில்விட்டு விடு” என்று சொல்கிறார்கள். பசுவின் பக்தியை சோதிக்க ஈஸ்வரன் புலியின் ரூபம் எடுத்து திருவேங்கை வாசல் வந்து சோதிக்கிறார். பசுவின் பக்தியை அறிய, “உன்னை சாப்பிட்டுவிடுவேன்” என்று இறைவன் பயமுறுத்தினார். காமதேனுவோ,”விரத பூஜையை முடித்து விட்டு வருகிறேன்” என புலியாகிய ஈசனிடம் சொல்லிவிட்டு இங்குள்ள சுவாமியை வணங்க வருகிறது. வணங்கியபின் மீண்டும் தன் சொல்லைக்காக திருவேங்கைவாசல் வருகிறது. அங்கு, காமதேனுவுக்கு, புலியாகிய இறைவனின் காட்சியும், மோட்சமும் கிடைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் மிகச் சிறந்த குடைவறைக் கோயிலாக இன்றும் திகழ்கிறது.

சிவபெருமான் காமதேனுவுக்கு மோட்சம் தரக் காரணமாக இருந்த சிவ தலம். கிழக்கு பார்த்திருக்கும் கோகர்ணேஸ்வரர் சன்னதி. பிரகதாம்பாள் புதுக்கோட்டை மன்னரோடு நேருக்கு நேர் பேசிய தெய்வம் என்று வரலாற்று கதை ஒன்று கூறுவதால் பிரகதாம்பாளைப் பேசும் தெய்வம் என்றே அழைக்கின்றனர்.

இத்தலத்திற்கு அருகில் விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், ஆத்மநாத சுவாமி திருக்கோயில், சிகாநாதர் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளது. இங்கு அரைக்காசு அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஏதேனும் பொருள் தொலைந்தால்,”அரைக்காசு அம்மனுக்கு காணிக்கை” எனக்கூறி, சிறிதுவெல்லத்தை எடுத்து வைத்துவிட்டுத் தேடினால் உடனே கிடைத்துவிடும்.

Chariot Accident in Pudukottai Gokarneswarar Temple