CBFC Chennai Zonal Officer to take charge: மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய சென்னை மண்டல அதிகாரி பொறுப்பேற்பு

சென்னை: Central Board of Film Certification, Chennai Zonal Officer to take charge: சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக டி.பாலமுரளி பொறுப்பேற்றார்.

இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு (Central Board of Film Certification) நாட்டின் விடுதலைக்குப் பின்பு ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் திரைப்படக் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிப்பவர்களின் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 1952 ஆம் ஆண்டில் திரைப்படத் தணிக்கைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த திரைப்படத் தணிக்கைக் குழுவில் இந்தியஅரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இவற்றின் நிரந்தர உறுப்பினர்களாகவும், இந்திய அரசு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள இலக்கிய வல்லுனர்கள், கலைத்துறையின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களை அவ்வப்போது இதன் தற்காலிக உறுப்பினர்களாகவும் நியமிக்கிறது. இக்குழுவில் 12 முதல் 25 உறுப்பினர்கள் வரை இடம் பெறுகின்றனர்.

இக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் திரைப்படங்களைப் பார்த்து அவற்றை வெளியிட சான்று அளிக்கப் பரிந்துரைக்கின்றனர். இந்தக் குழுவினர் திரைப்படத்தில் இந்திய அரசின் இறையாண்மை, எல்லை, பண்பாடு, அரசியல் , சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மீறாத வகையில் உள்ளதா என்பதைக் கண்காணிப்பதுடன் வன்முறை, கொடுமை, ஆபாசம், பாலியல் குறைபாடு முதலியவை இல்லாதபடி அமைந்துள்ளதா என்று சரிபார்க்கப் படுகிறது. மேலும் தனிப்பட்ட அவதூறுகள், மத உணர்வுகளைத் தூண்டுதல், சடங்குகலின் பெயரால் நிகழும் தவறுகள் ஆகியன படங்களில் இடம் பெற்றுள்ளனவா என்றும் பார்வையிட்டு சான்றுக்குப் பரிந்துரைக்கிறது.

திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்தியாவில் வெளியாகும் பல்வேறு மொழிப் படங்களுக்கும் சான்றளிக்கும் இங்குதான் சான்றளிக்கப்படுகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் அந்தந்த வட்டாரங்களின் மொழிகளில் அல்லது பகுதிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைப் பரிசீலித்து சான்றுகள் அளிக்கின்றன. சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக டி.பாலமுரளி இன்று பொறுப்பேற்றார். இவர் இந்தப்பதவியை 4 ஆண்டுகள் வகிப்பார்.

தஞ்சாவூர் மாவட்டம் பொன்னவராயன் கோட்டை என்ற சிற்றூரில் பிறந்த பாலமுரளி, காரைக்குடியில் உள்ள மத்திய மின் ரசாயன ஆராய்ச்சி கழகத்தில் ரசாயனம் மற்றும் மின் ரசாயன பொறியியல் பட்டம் பெறுவதற்கு முன் நாட்டுசாலை என்ற இடத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அரசுத்துறை பணியில் சேர்வதற்கு முன் சில ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணிபுரிந்தார்.

கடந்த 2012-ல் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற இவர், கேரளா தொகுப்பு ஐஏஎஸ் அதிகாரியானார். கேரள அரசின் பதவிக்காலத்தில் பாலக்காடு, பத்தனம்திட்டா மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தார். திரு பாலமுரளி, கேரள சுற்றுலா மேம்பாட்டு கழகம், கேரள மருத்துவ சேவை கழகம் உள்ளி்ட்ட பல முக்கியமான துறைகளின் தலைமைப்பொறுப்பை வகித்துள்ளார்.

சென்னையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல அதிகாரியாக பாலமுரளி பொறுப்பேற்பதற்கு முன் கேரளாவின் ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராகவும், உள்ளாட்சி நிர்வாக முதன்மை இயக்குனராகவும் பதவி வகித்துள்ளார்.