Bear biting 3 people: தென்காசியில் 3 பேரை கடித்து குதறிய கரடி.. வனத்துக்குள் தப்பியோட்டம்

தென்காசி: A bear biting 3 people in Tenkasi has created a stir. தென்காசியில் கரடி ஒன்று 3 பேரை கடித்துக்குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிவசைலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த வனப்பகுதி அருகே அமைந்துள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி இரவு நேரங்களில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அப்பகுதியில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக இன்று அதிகாலை வியாபாரி ஒருவர் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த கரடி ஒன்று வியாபாரியை கடித்து குதறியது. வியாபாரியின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதியிலிருந்த சைலப்பன், நாகேந்திரன் உள்ளிட்ட சிலர் கரடியை விரட்டியுள்ளனர். ஆனால் எந்தவித ஆயுதங்களும் இல்லாத நிலையில் அவர்கள் இருவரையும் கரடி கடித்து குதறிவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ள நிலையில் கரடிகளை ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.