Bathing in Kollimalai waterfalls is prohibited: கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை

நாமக்கல்: Bathing in Kollimalai waterfalls is prohibited. தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொல்லிமலை அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சுற்றுலாத்தலமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை விளங்கி வருகிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற வல்வில் ஓரி மன்னன் ஆட்சி புரிந்த இந்தக் கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி ஆகிய அருவிகள் உள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். மேலும் போட் ஹவுஸ், பொட்டானிக்கல் கார்டன், அரசு பழப்பண்ணை, வியூ பாயிண்ட், அரப்பளீஸ்வரர் கோவில், கொல்லிப்பாவை, எட்டுக்கை அம்மன் கோவில் போன்றவையும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். கொல்லிமலைக்குச் செல்வதற்கு மிகவும் குறுகிய 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையில் செல்ல வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் தொடர் கன மழை பெய்து வருகிறது. கொல்லிமலை பகுதியிலும் இரண்டு நாட்களாக விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கொல்லிமலையில், கடந்த 9ம் தேதி இரவு 94 மி.மீ மழையும், 10ம் தேதி இரவு 71 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் ரோட்டின் தாழ்வான பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மலையின் பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. ஆகாச கங்கை, நம்ம அருவில, மாசிலா அருவி உள்ளிட்ட நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மறு உத்திரவு வரும் வரை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும் மற்றும் அங்கு குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்து உத்திரவிட்டுள்ளனர். மேலும் அருவிக்கு செல்லும் வழியில் தடை ஏற்படுத்தி உள்ளனர்.

இன்று 11ம் தேதி காலை 7மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பதிவான மழை அளவு விபரம் : நாமக்கல் 35 மி,மீ, கலெக்டர் ஆபீஸ் 39 மி,மீ, எருமப்பட்டி 10 மி,மீ, மங்களபுரம் 17 மி,மீ, மோகனூர் 14 மி,மீ, பரமத்தி வேலூர் 2 மி,மீ, புதுச்சத்திரம் 30 மி,மீ, ராசிபுரம் 14 மி,மீ, சேந்தமங்கலம் 57 மி,மீ, திருச்செங்கோடு 57 மி,மீ, கொல்லிமலை 71 மி,மீ. மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 292 மி.மீ. மழை பெய்துள்ளது.