Ban on Chaturagiri hill: சதுரகிரி மலைக்கு செல்ல பக்கதர்களுக்கு திடீர் தடை

விருதுநகர்: The forest department has banned pilgrims from visiting the Chaturagiri hill near Srivilliputhur. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று தை மாத வளர்பிறை பிரதோஷம் நாளை முன்னிட்டு, இன்று 3ம் தேதி (வெள்ளி கிழமை) முதல், வரும் 6ம் தேதி (திங்கள் கிழமை) வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை கருதி, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு இன்றும், நாளையும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சூழ்நிலைக்கேற்ப வரும் 5ம் தேதி (ஞாயிறு கிழமை) தை மாத பௌர்ணமி மற்றும் தைப்பூசம் திருநாளுக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அது குறித்து, 4ம் தேதி (சனி கிழமை) மாலை தகவல் அறிவிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த திடீர் தடை அறிவிப்பால், இன்று தை மாத வளர்பிறை பிரதோஷம் நாளில், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.