Auto fare: விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்

விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்
விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்

Auto fare: விரைவில் புதிய ஆட்டோ கட்டணத்தை வெளியிட போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்வது குறித்து வரும் 13ம் தேதி ஆலோசனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் முறையாக வசூலிக்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அண்மையில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பெட்ரோல் , டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றியமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அத்துடன் சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து , முறையாக அவை வசூலிக்கப்படுகிறதா என்பதை போக்குவரத்துத்துறை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதன்பிறகு ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை ( மே 13 ஆம் தேதி) ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது, போக்குவரத்து ஆணையர் தலைமையில், தொழிற்சங்கம், அரசு அதிகாரிகள் கொண்ட குழுவுடன் ஆலோசனை நடைபெறும் என போக்குவரத்துறை இணை ஆணையர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டு ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 25 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும், பின்னர் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.10 வசூலிக்க வேண்டும் எனவும் மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிகரித்துள்ள பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்ப மறு நிர்ணயம் செய்ய போக்குவரத்துத் துறை முடிவு செய்திருக்கிறது. ஆலோசனைக்குப் பின் கட்டண மறு நிர்ணயம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று , ஒப்புதல் பெறப்பட்ட பின் புதிய கட்டண முறையை அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை