Jayalalithaa death case: ஜெயலலிதா இறப்பில் சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள்: ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி

சென்னை: Arumugasamy Inquiry Committee suggests probe against Sasikala, former minister. தமிழக சட்டப்பேரவையில் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், அவரது தோழியான சசிகலாவுக்கும் இடையே சுமூக உறவு இல்லை எனவும், 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு தாமதமின்றி அழைத்து சென்றுள்ளதாகவும், அதற்கு பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுள்ளன என ஆணையம் தெரிவித்துள்ளது.

அதே போல், ஜெயலலிதா போயஸ் தோட்ட வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை அனுமதித்தவர்களிடம் அசாதாரணமான செயல் எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும் ஜெயலலிதாவிற்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சை செய்ய அமெரிக்க மருத்துவர் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ, அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் ஏன் கடைசி வரை நடக்கவில்லை என ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன. ஜெயலலிதாவுக்கு வெஜிடேசன், குடல்நோய் அறிகுறி உபாதைகள் ஆகியவை குறித்து மருத்துவ அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை. ஜெயலலிதா மரணத்தில் அவரது தோழி சசிகலா, டாக்டர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் புரிந்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணி என மருத்துவமனை தெரிவிக்கும் நிலையில், டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 முதல் 3:50 மணிக்குள் இறந்ததாக சாட்சியங்கள் கூறுகின்றனர்.

ஆணையத்தின் பார்வையில், ஜெயலலிதா டிச.,4, 2016ல் பிற்பகல் 3:50 மணிக்கு காலமானார். சி.பி.ஆர் (CPR) மற்றும் ஸ்டெர்னோடமி பயனற்றவை என்பதுடன், அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமத்திற்கான காரணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன என ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.