அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

Anna University: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்து வரி குறித்தும், கல்விக் கட்டணம் குறித்தும், மதுவிலக்கு குறித்தும், நீட் தேர்வு குறித்தும், நகைக் கடன் குறித்தும், பயிர்களுக்கான இழப்பீடு குறித்தும், உரத் தட்டுப்பாடு குறித்தும், மின்சார கட்டணம் குறித்தும் நீட்டி முழக்கிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றையெல்லாம் காற்றில் பறக்க விட்டதோடு மட்டுமல்லாமல், அதற்கு நேர்மாறான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை இதுதான் திமுக அரசின் சாதனை போலும்.

சென்ற ஆண்டு இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீதும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணங்கள் மீதும், தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான கட்டணத்தின் மீதும், விடைத்தாளின் நகலினை பெறுவதற்கான கட்டணத்தின் மீதும் 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை அண்ணா பல்கலைக்கழகம் விதித்தது.

இந்த வரி விதிப்பு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாமல் அதன் இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் பொருந்தும். இதனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் அறிக்கை வாயிலாக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.

இந்த நிலையில், சென்ற மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் இரண்டு முதல் மூன்று விழுக்காடு வரை உயர்த்தப்பட்டன. இதனைக் கண்டித்து மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தினர். நானும் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இதனைத் தொடர்ந்து, கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது என்பதை பத்திரிகைகளின் வாயிலாக அறிந்து கொண்டேன். தற்போது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளுக்கான பல்வேறு சான்றிதழ் கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதன்படி, மதிப்பெண் நகல் சான்றிதழுக்கான கட்டணம் பத்து மடங்கு, அதாவது 300 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, பட்டப் படிப்பு நகல் சான்றிதழுக்கான கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும், இரண்டாவது முறை நகல் சான்றிதழ் பெற வேண்டுமாயின் அதற்கான கட்டணம் 10,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரியும் விதிக்கப்படுகிறது.

பெரும்பாலான பொறியியல் மாணவ, மாணவியர் ஏழை எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் மூலம் தங்கள் படிப்பை தொடர்கின்றனர் என்பதும் யாவரும் அறிந்த ஒன்று. கல்விக் கட்டணத்தை செலுத்தவே சிரமப்படும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது இதுபோன்ற கூடுதல் சுமையை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இந்த பத்து மடங்கு கட்டண உயர்வு மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது.

எனவே, தமிழக முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பிற பல்கலைக்கழகங்களும் இதுபோன்ற கட்டண உயர்வு அறிவிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Crime: குழந்தையை கொன்று தற்கொலை செய்த இளம்பெண்