Anbumani urges Governor: ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தல்

anbumani ramadoss
தமிழக பள்ளிகளில் 50 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

சென்னை: Anbumani urges Governor to give immediate approval to online gambling ban. ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், எம்பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் செய்து கொல்லப்பட்ட 29-ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான பா.ம.க.வின் தொடர் போராட்டம் காரணமாக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆளுனரும் உடனடியாக அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த தற்கொலையை தடுத்திருக்கலாம்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இன்னொருவர் உயிரிழந்தால் அதற்கு ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன். அதை ஆளுனர் மாளிகை பொருட்படுத்தாதது தான் இன்னொரு இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனியும் எவரும் உயிரிழக்கக் கூடாது. அதை கருத்தில் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.