Anbumani warning to NLC: வேலை கொடுங்க.. மறுத்தால் பூட்டு; என்.எல்.சி.க்கு அன்புமணி பகிரங்க எச்சரிக்கை

சென்னை: Anbumani Ramadoss has issued a warning to Cuddalore NLC: கடலூர் என்எல்சி நிறுவனத்தில் ஒரு தமிழர் கூட நியமிக்காததை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி நிறுவனத்திற்கு கேட் (GATE) தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ள 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு பொறியாளர்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பொறியாளர் நியமனத்தில் பல ஆண்டுகளாகவே தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. வட இந்தியர்களுக்கு ஆதரவாக போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கின்றன. என்.எல்.சியின் உயர்பதவிகளை முழுக்க முழுக்க வட இந்தியர்கள் ஆக்கிரமித்திருப்பது தான் இதற்கு காரணம் என்.எல்.சி சுரங்கங்கள் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் பாட்டாளிகள்.

தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் தமிழர்கள். அதனால் வளர்ந்த என்.எல்.சி நிறுவனத்தின் பயன்களை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் சுரண்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

என்.எல்.சி நியமனங்களில் மாநில ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் மட்டுமே சமூக நீதியை நிலை நிறுத்த முடியும். பணியாளர்களில் 100%, அதிகாரிகளில் 50% பணிகள் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவற்றிலும் நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடும், நிலம்கொடுத்தவர்களுக்கு முன்னுரிமையும் வழங்க என்.எல்.சி நிறுவனம் மறுத்தால், கடலூர் மாவட்ட மக்களைத் திரட்டி என்.எல்.சிக்கு பூட்டு போடும் மாபெரும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நெய்வேலி NLC நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்களில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை எடுத்து தொழில் நடத்தும் பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

உடனடியாக புதிய பொறியாளர் தேர்வு பட்டியலை ரத்துசெய்துவிட்டு NLCக்கு இடம் கொடுத்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும்.

NLC நிறுவனம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைப் புறக்கணிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கி போராடும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட, தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.