அ.தி.மு.க-தி.மு.க. ஆட்சியில் எந்த வித்தியாசமும் இல்லை- அன்புமணி ராமதாஸ்

anbumani-ramadoss
அ.தி.மு.க-தி.மு.க. ஆட்சியில் எந்த வித்தியாசமும் இல்லை- அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி பெல் தொழிற்சாலையை தனியாருக்கு விற்க முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. உற்பத்தியையும் குறைத்து விட்டார்கள். கேரளாவில் மத்திய அரசு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்தபோது அதன் 49 சதவீத பங்குகளை அந்த மாநில அரசு வாங்கிக்கொண்டது.

எனவே பெல் தொழிற்சாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அதன் பங்குகளை தமிழக அரசு வாங்க வேண்டும்.

திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 2017 ஆம் ஆண்டு ரூ.350 கோடியில் தொடங்கப்பட்டது. ஆனால் பல வருடங்களாகியும் பணிகள் முழுமை அடையவில்லை. இந்த பணிகளை விரைந்து செயல்படுத்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது? என்பது பற்றி பா.ம.க. உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யும். காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் வருகிற 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கையை விவாதிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

மேலாண்மை வாரியம் என்பது நீரை பகிர்ந்து கொள்வதற்கு அமைக்கப்பட்ட வாரியம். எனவே இதில் அணை கட்டுவது தொடர்பா க விவாதிக்க அனுமதிக்ககூடாது. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு சட்டம் இயற்றுவதை பா.ம.க. வரவேற்கிறது. தமிழகத்தில் மது போதை அதிகரித்துள்ளது. தமிழக அரசின் ஓராண்டு கால ஆட்சியில் பத்து மாதம் கொரோனா வைரசில் முடிந்துவிட்டது. தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணிகள் தமிழில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. இது போன்று பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இதுவரை லாக்கப் மரணங்கள் நடந்திருக்கின்றன. எனவே காவல் துறையில் கோளாறு இருப்பது தெரிகிறது.

இதனை தடுக்க சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். காவல் நிலையங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கும், தற்போதைய தி.மு.க. ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தலைவர்கள் மட்டுமே வேறு வேறு. தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி பல வெற்றிகளை பா.ம.க. தேடித்தந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி